கூடுதல் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல்: மனைவி புகாரில் கணவன் கைது
பாலையம்பட்டி:
அருப்புக்கோட்டையை சேர்ந்த எம்.ஏ. பட்டதாரியான கிருஷ்ணவேணி (வயது28) என்பவருக்கும் மதுரை அனுப்பானடியை சேர்ந்த தினகரன் என்பவருக்கும் 2012–ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் கிருஷ்ணவேணி புகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
திருமணத்தின்போது எனக்கு 80 பவுன் நகையும், ரூ.10 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன. கணவர் தினகரன், எம்.பி.ஏ. படித்துள்ளதாக கூறி என்னை திருமணம் செய்தார். ஆனால் அவர் டிப்ளமோ சிவில் மட்டுமே படித்திருப்பது திருமணத்திற்கு பிறகு எனக்கு தெரியவந்தது.
என்னை ஏமாற்றி திருமணம் செய்த அவர் நகைகளையும் பறித்து கொண்டார். தற்போது கூடுதல் வரதட்சணை கேட்டு கொலைமிரட்டல் விடுக்கிறார். இதற்கு அவரது தாய் ஜெயவேலும் உடந்தை யாக உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி தாய்–மகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் தினகரன் கைது செய்யப்பட்டார்.