செய்திகள்
கடத்தல்காரர்கள் விட்டுச்சென்ற விநாயகர் சிலையை படத்தில் காணலாம்.

சிதம்பரத்தில் சாலையோரத்தில் திடீர் விநாயகர் சிலை: கடத்தல்காரர்கள் விட்டுச் சென்றார்களா? - போலீசார் விசாரணை

Published On 2016-06-19 10:03 IST   |   Update On 2016-06-19 10:03:00 IST
சிதம்பரத்தில் சாலையோரம் விநாயகர் சிலையை கடத்தல்காரர்கள் விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம்:

வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக சென்னையில் உள்ள தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் ஏராளமான சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

சிலைகடத்தல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிதம்பரத்தில் சாலையோரம் விநாயகர் சிலையை கடத்தல்காரர்கள் விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ளது எண்ணாநகரம் கிராமம். இந்த கிராமத்தின் சாலையோரம் 3 அடி உயரத்தில் 300 கிலோ எடையுள்ள விநாயகர் சிலையை யாரோ விட்டுச் சென்று விட்டனர். இந்த தகவல் அந்த கிராமம் முழுவதும் காட்டுத் தீயாய் பரவியது. பொது மக்கள் திரண்டு வந்து விநாயகர் சிலையை வழிபட்டனர்.

சாலையோரம் விநாயகர் சிலை உள்ளது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் விரைந்து வந்து விசாரித்தார்.

பின்னர் அவர் கூறுகையில், விநாயகர் சிலையை மர்ம மனிதர்கள் எங்கிருந்தோ கடத்தி வந்துள்ளனர். பாரம் தாங்காமல் எண்ணாநகரம் கிராமத்தில் சாலையோரம் விட்டுச் சென்றுள்ளனர் என்றார்.

போலீஸ் விசாரணைக்கு பின்னர் அந்த விநாயகர் சிலையை அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு எடுத்துச்சென்று பொது மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலை குறித்து அண்ணாமலை பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர் சிவ ராமகிருஷ்ணன் கூறுகையில் இந்த விநாயகர் சிலை 16-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்.

இந்த விநாயகர் உச்சிஸ்த விநாயகராக இருக்கலாம். தேவியை மடியில் அமர வைத்த நிலையில் காட்சி அளிக்கிறார் என்றார்.

விநாயகர் சிலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News