செய்திகள்
என்.எல்.சி. தொழிலாளி வாக்களித்தபோது எடுத்த படம்.

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களை தேர்ந்தெடுக்க என்.எல்.சி.யில் ரகசிய வாக்கெடுப்பு: தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பு

Published On 2016-06-17 10:45 IST   |   Update On 2016-06-17 10:45:00 IST
அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
நெய்வேலி:

நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 13 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். 13-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உள்ளன.

இந்த தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு கட்சிகள் சார்பாக செயல்படுகின்றன.

என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்துடன் பேச்சு நடத்த 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழிற்சங்கங்களுக்கிடையே ரகசிய வாக்கெடுப்பு நடைபெறும்.

அதன் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

2016-2020-ம் ஆண்டுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் என்.எல்.சி.யில் உள்ள 14 தொழிற்சங்கங்களில் சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், பி.எம்.எஸ்., பாட்டாளி தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி., தொ.மு.ச. உள்பட 6 தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன.

சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்திற்கு எச்.எம்.எஸ்., எல்.எல்.எப்., எம்.எல்.எப், டி.எம்.டி.யு, தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம், டி.டி.யு.சி. உள்பட 6 சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்திற்கு மூவேந்தர் முன்னேற்ற சங்கமும், பிற்படுத்தப்பட்டோர் பேரவையும் ஆதரவு தெரிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் தொழிற்சங்கத்தினர், தாங்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்பட்டால் தொழிலாளர்களுக்கு பெற்று தரப்படும் உரிமைகள், சலுகைகள் குறித்த விவரங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதற்காக என்.எல்.சி. நிறுவனத்தில் 16 பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாக்குப்பதிவு இன்று மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு காலை தொடங்கியதும் தொழிலாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பூத்களுக்குச் சென்று நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்குகளை பதிவு செய்தனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வட்டம் 9-ல் உள்ள என்.எல்.சி. நடுநிலைப்பள்ளிக்கு எடுத்து வரப்படுகின்றன. அங்கு உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. நள்ளிரவு 11 மணி அளவில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தேர்தலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1.1.2017 முதல் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் அமைய உள்ளதால் தற்போது நடைபெறும் ரகசிய வாக்கெடுப்பு தேர்தலை மிகவும் முக்கியமானதாக கருதி தொழிலாளர்கள் வாக்களித்து வருகிறார்கள்.

Similar News