செய்திகள்

சேமிப்பு கணக்குகளில் மோசடி: அஞ்சலக பெண் முகவர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

Published On 2016-06-15 10:09 IST   |   Update On 2016-06-15 10:09:00 IST
சேமிப்பு கணக்குகளில் மோசடி: அஞ்சலக பெண் முகவர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை
காரைக்குடி:
 
காரைக்குடியில் உள்ள தலைமை தபால் நிலைய சேமிப்பு கணக்குகளில் பல லட்ச ரூபாய் மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் அஞ்சலக பெண் முகவர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சில மாதங்களுக்கு முன்னர் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் பல்வேறு நபர்களின் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி அவர்களின் கணக்குகளில் இருந்த பல லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றம் செய்து மோசடி நடந்து இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து எழுந்த புகாரின்பேரில் தபால்துறை உயர் அதிகாரிகள், காரைக்குடி தலைமை தபால் நிலையத்தில் உள்ள அஞ்சலக சேமிப்பு கணக்குகளை ஆய்வு செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக அந்த துறையில் வேலை பார்த்த ஒரு பெண்ணிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனை அறிந்த அந்த பெண் திடீரென தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் காரைக்குடி சர்ச் 2-வது வீதியில் வசிக்கும் அஞ்சலக முகவர் லலிதா என்பவரின் வீட்டிற்கு நேற்று 7 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் வந்தனர். அவர்கள் வீட்டினுள் அதிரடியாக நுழைந்ததும், அங்கு இருந்தவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர். வீட்டின் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் அவரது வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். மேலும், லலிதாவிடம் அவர்கள் விசாரணையும் நடத்தியதாக தெரிகிறது. சோதனையின்போது, சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
 

Similar News