செய்திகள்

சிவகங்கை படமாத்தூரில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கி ரூ.22 ஆயிரம் கொள்ளை

Published On 2016-06-11 11:14 IST   |   Update On 2016-06-11 11:14:00 IST
பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கி கத்திமுனையில் ரூ.22 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் படமாத்தூரில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு ஊழியராக இருப்பவர் செல்வம் (வயது32). இரவு காவலராக பணியாற்றுபவர் அங்கமுத்து (60).

நேற்று இரவு இவர் காவல் பணியில் இருந்தார். செல்வம் பங்க் அலுவலகத்தில் இருந்தார். அப்போது அங்கு 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

வாகனத்தை ஓட்டி வந்தவன் ஹெல்மெட் அணிந்திருக்க மற்றவர்கள் சாதாரணமாகத்தான் இருந்துள்ளனர். வாகனத்தை கண்டதும் செல்வம் பெட்ரொல் போட எழுந்து வந்துள்ளார்.

அப்போது வாகனத்தில் வந்த 3 பேரும் திடீரென செல்வத்தை தாக்கினர். இதில் அவர் நிலை குலைந்ததும் பணப்பையை பிடுங்க முயன்றனர். இதனை கண்ட இரவு காவலர் அங்கமுத்து அங்கு ஓடிவர அவரையும் 3 பேர் கும்பல் தாக்கியது. பின்னர் அந்த கும்பல் கத்திமுனையில் 2 பேரையும் மிரட்டி பணப்பையை பறித்தது. மேலும் அவர்கள் 2 பேரின் செல்போன்களையும் பிடுங்கி சென்றது.

பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி மதுரை சாலையில் வேகமாக சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பூவந்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பணப்பையில் ரூ.22 ஆயிரம் வரை இருக்கலாம் என ஊழியர்கள் என கூறினர்.

தாக்குதலில் காயம் அடைந்த செல்வம் மற்றும் அங்கமுத்து சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இன்று அதிகாலை நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கி பணம் பறித்து சென்றவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News