குடும்ப பிரச்சினையில் கணவன்–மனைவி தீயில் கருகி பலி
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா சாக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது36). கொத்தனாரான இவருக்கு கற்பகம் (30) என்ற மனைவியும், 3 வயது ஆண் குழந்தையும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
மது பழக்கத்திற்கு அடிமையான கணபதி அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் கோவில் திருவிழா தொடங்கியதையடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குழந்தைகளுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து வந்தார்.
நேற்று கணபதி வழக்கம் போல் மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்கு வந்தார். அப்போது மனைவி காப்பு கட்டி இருக்கும் நேரத்தில் ஏன் மது குடித்தீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த கற்பகம் திடீரென வீட்டிலிருந்து மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை எதிர்பாராத கணபதி அதிர்ச்சி அடைந்து உடனே மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் 2 பேரும் உடல் கருகினர். வலியால் அலறி துடித்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கணபதி, கற்பகம் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்த சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.