செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் அரசு இ.சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்தலாம் கலெக்டர் தகவல்

Published On 2016-06-05 15:59 IST   |   Update On 2016-06-05 15:59:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் அரசு இ.சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்தலாம் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட மின் ஆளுமை சங்கம் மூலமாக மொத்தம் 331 அரசு இ–சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 16 மையங்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக வட்டாட்சியர் அலுவலகங்களிலும், 5 மையங்கள் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலமாக மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் இதர இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இதுதவிர, கிராம ஊராட்சிகளில் 129 மையங்கள் வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் மூலமாகவும், 181 மையங்கள் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலமாகவும் சேவைகள் வழங்கி வருகின்றன. இச்சேவை மையங்கள் மூலமாக வருவாய்த்துறை சான்றிதழ்கள், சமூகநலத்துறை திருமண நிதி உதவி திட்டம் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது, அரசு இ–சேவை மையங்களின் மூலமாக மின்கட்டணமும் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த மின்சார வாரிய அலுவலகங்களுக்கு நீண்டதூரம் செல்லாது, தங்களது இல்லத்திற்கு அருகாமையில் உள்ள அரசு இ–சேவை மையத்தின் சேவையை பயன்படுத்தி தங்களது மின்கட்டணத்தை செலுத்தலாம்.

பொதுமக்கள் மேற்கண்ட அரசு இ–சேவை மையங்களை மின்கட்டணம் செலுத்த பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Similar News