அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மேல்நிலை கல்வி பயில நிதிஉதவி: கலெக்டர் அறிவிப்பு
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள், 3 மாணவியர்கள் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த 2 மாணவர்கள், 2மாணவியர்கள் ஆக மொத்தம் 10 மாணவ – மாணவியரைத் தேர்வு செய்து அவர்கள் விரும்புகின்ற தமிழகத்திலுள்ள தலைசிறந்த தனியார் பள்ளிகளில் 11ஆம் வகுப்பில் சேர்ந்து மேல்நிலைக்கல்வி பெற ஏதுவாக அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் உதவி பெற விரும்பும் மாணவ –மாணவியரின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூபாய் 2 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு உயர்ந் தபட்சமாக ஆண்டொண்டிற்கு ரூ.28,000–க்கு மிகாமல் இரண்டாண்டிற்கு ரூ.56,000– நிதியுதவி வழங்கப்படுகிறது.
கல்வி கட்டணம் ரூ.8,000, பராமரிப்புக் கட்டணம் ரூ.3650, விடுதிக்கட்டணம் ரூ.15,000 (விடுதியல் சேர்ந்து பயில்பவருக்கு மட்டும்), சிறப்புப் பயிற்சிக் கட்டணம் ரூ.1,500, ஆகமொத்தம் ரூ.28,150 அல்லது ரூ.28,000 (ஓராண்டிற்கு) மட்டும் வழங்கப்படும்.
தகுதியுடைய மாணவ –மாணவியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.