தேவகோட்டையில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை
தேவகோட்டை:
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரை சேர்ந்தவர் சதாசிவம் (வயது35). ஆசாரியான இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தங்கி இருந்து வேலைபார்த்து வந்தார்.
இந்நிலையில் சதாசிவம் தனது நண்பர்கள் திருவெற்றியூரை சேர்ந்த கருப்பையா, தேவகோட்டையை சேர்ந்த குமார் உள்பட 3 பேருடன் தேவகோட்டை பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே கள்ளத்தனமாக மது வாங்கினர். பின்னர் 4 பேரும் கடையின் முன்பு வாசலில் அமர்ந்து மது குடித்துள்ளனர்.
போதை தலைக்கேறிய நிலையில் சதாசிவத்துக்கும், 3 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே அப்பகுதி மக்களும் சமாதானம் செய்து வைக்க முயன்றுள்ளனர். ஆனாலும் 4 பேர் சண்டை போடுவதை நிறுத்தவில்லை.
அப்போது ஆத்திர மடைந்த கருப்பையா, குமார் உள்பட 3 பேர் சதாசிவத்தை படுக்க வைத்து மதுபாட்டிலால் கழுத்தை அறுத்தனர். வலியால் அலறி துடித்த அவர் ரத்த வெள்ளத்தில் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதா சிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பதுங்கி இருந்த குமாரை கைது செய்தனர். கருப்பையா உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்துள்ள இந்த கொலை சம்பவம் தேவகோட்டை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.