செய்திகள்

சேத்தியாதோப்பில் சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

Published On 2016-06-02 10:17 IST   |   Update On 2016-06-02 10:17:00 IST
சேத்தியாதோப்பில் சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 20 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
சேத்தியாத்தோப்பு:

சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கிளாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோபால்சாமி. இவர் எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.

கத்திரி வெயில் முடிந்த பின்னரும் கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. எனவே கோபால்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் காற்றுக்காக வீட்டுக்கு வெளியே படுத்திருந்தனர்.

இதையறிந்த மர்ம மனிதர்கள் இன்று அதிகாலை கோபால்சாமி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 20 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இன்று காலை கோபால் சாமி எழுந்தபோதுதான் வீட்டில் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

இந்த துணிகர கொள்ளை குறித்து கோபால்சாமி சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்தார். போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சக்தி கணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரித்தனர்.

கடலூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து 1 கி.மீ. தூரம் ஓடிச் சென்று படுத்துக் கொண்டது.

இந்த நிலையில் கோபால்சாமி வீட்டில் கை வரிசை காட்டிய கொள்ளையர்கள் அதே பகுதியில் உள்ள 6 வீடுகளின் கதவை உடைத்துள்ளனர்.

வீட்டுக்காரர்கள் சத்தம் போட்டதால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. சேத்தியாத்தோப்பு பகுதியில் அடுத்தடுத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்ட முயன்றது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Similar News