செய்திகள்

விருத்தாசலம் அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல்

Published On 2016-05-31 11:43 IST   |   Update On 2016-05-31 11:43:00 IST
விருத்தாசலம் அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூதாமூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 30), தொழிலாளி.

கடந்த மாதம் ஏனாதிமேடு பகுதியில் நடந்த சவ ஊர்வலத்தில் பாண்டியன் கலந்து கொண்டார். அந்த ஊர்வலத்தில் பூதாமூரைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் பி.ஜி.சேகரும் கலந்து கொண்டார்.

ஊர்வலத்தில் நடந்து சென்றபோது சேகருக்கும், பாண்டியனுக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த 2 பேரும் மோதிக் கொண்டனர். அருகில் இருந்தவர்கள் சண்டையை விலக்கி விட்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சேகர் தனது காரில் பாண்டியன் வீட்டுக்கு சென்றார். அவர் கொண்டு சென்ற ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகளை காட்டி பாண்டியனை மிரட்டினார். பின்னர் சரமாரியாக தாக்கினார்.

மேலும் என்னிடம் மோதினால் உன்னை வெடிகுண்டு வீசி கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இது குறித்து பாண்டியனின் தாயார் ராணி (54) விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சேதுபதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் பி.ஜி.சேகரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பெட்ரோல் குண்டு மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News