ஜெயங்கொண்டம் அருகே விவசாயியை தாக்கிய 4 பேர் கைது
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பிராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 50). விவசாயி. இவரது முருங்கை தோப்பில் அதே ஊரைச்சேர்ந்த முருகேசன் (35) என்பவரது மாடுகள் மேய்ந்தது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று காலை முருகேசன், அவரது மனைவி அஞ்சலை, அவரது சகோதரர் தர்மராஜ் (35), மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அய்யாப்பிள்ளை, வெள்ளச்சாமி மகன் பாண்டியன் (35), தங்கராசு மகன் பிச்சைமுத்து, முருவன் மகன் முத்து, ஆமணக்கந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் கணேசன் (50) ஆகியோருடன் சண்முகசுந்தரம் வீட்டின் முன் நின்றுகொண்டு அவதூறாக திட்டியுள்ளனர்.
இதனை தட்டிக்கேட்ட சண்முகசுந்தரத்தை முருகேசன் மற்றும் அவருடன் வந்தவர்கள் கட்டையால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த சண்முகசுந்தரம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து,முருகேசன், தர்மராஜ், பாண்டியன், கணேசன் ஆகியோரை கைது செய்தார்.தப்பி ஓடிய மற்ற 4 பேரை தேடி வருகிறார்.