செய்திகள்

ஊட்டியில் போலீசாருக்காக நடமாடும் கழிப்பறை வாகனங்கள் இயக்கம்

Published On 2016-05-29 12:48 GMT   |   Update On 2016-05-29 12:48 GMT
ஊட்டியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்காக நடமாடும் நவீன கழிப்பறை வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசனும் நடக்கிறது. இந்த சீசன் காலங்களில் சமவெளி பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். ஊட்டியில் தற்போது கோடை சீசன் நடைபெற்று வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் ஊட்டி-குன்னூர் சாலை, ஊட்டி- கூடலூர் சாலை, ஊட்டி நகரம், கோத்தகிரி சாலை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

மேலும் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கோடை சீசன் காலங்களில் ஊட்டியில் போக்குவரத்தை சீரமைக்கவும், பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் சமவெளி பகுதிகளில் இருந்து போலீசார் வரவழைக்கப்படுகின்றனர். இவ்வாறு சாலையோரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் அவசரத்திற்கு கழிப்பறைகளை தேடி செல்லும் நிலை உள்ளது. இதில் பெண் போலீசாரின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது.

இந்த நிலையில் போலீசாரின் வசதிக்காக ஊட்டியில் 2 நடமாடும் கழிப்பறை வாகனங்கள் போலீஸ் துறை சார்பில் வாங்கப்பட்டு உள்ளது. இந்த கழிப்பறை வாகனங்களை போலீசார் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படும் நிகழ்ச்சி ஊட்டி சேரிங்கிராசில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

மலர்கண்காட்சியை முன்னிட்டு கூடலூர் வழியாக ஊட்டிக்கு வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் எச்.பி.எப். பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து சுற்றுலா பயணிகள் அரசு பஸ்களில் பயணம் செய்து சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கலாம். மேலும் கமர்சியல் சாலையில் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துவது தடை செய்யப்பட்டு உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்து உள்ளது.

ஊட்டியில் தற்போது பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்காக 2 நடமாடும் கழிப்பறை வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், அசோக்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Similar News