கடலூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: அதிகாரிகளுடன் வியாபாரிகள் மோதல்
கடலூரில் முக்கிய பகுதிகளில் செல்லும் கழிவுநீர் புதுப்பாளையம், வண்ணாரப்பாளையம், பீச்ரோடு வழியாக வந்து கடலில் கலக்கிறது. இந்த கழிவுநீர் நகரில் இருந்து கடலுக்கு செல்லும் கால்வாய் அகலமாக இருந்தது.
அந்த கால்வாயில் வியாபாரிகள் சிலர் கடைகளை வைத்து ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் கடைகள் இருக்கும் பகுதியில் கால்வாயை சுத்தம் செய்ய முடிவதில்லை. அந்த இடங்களில் கழிவுநீர் தேங்கி விடுகிறது.
துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் கொசு தொல்லைகளும் அதிகரித்து உள்ளது. எனவே இந்த கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்பகுதியில் குடியிருப்பவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். நகராட்சி கமிஷனர் முருகேசன் உத்தரவின்பேரில், நகர்நல அலுவலர் டாக்டர்.சிவக்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் திருப்பதி மற்றும் நகராட்சி ஊழியர்கள் இன்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் புதுப்பாளையம், வண்ணாரப்பாளையம் ஆகிய பகுதிகளில் கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற தொடங்கினர்.
இதில் கோபம் அடைந்த வியாபாரிகள் அதிகாரிகளிடம் கடைகளை அகற்ற கூடாது என்று கூறினர். ஆனால் கால்வாயை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருப்பதால் கழிவுநீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் கடைகளை அகற்ற வேண்டும் என்று அவர்களிடம் அதிகாரிகள் கூறினர்.
இதனால் வியாபாரிகள் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்தனர். அதன்பின்னர் வியாரிகள் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
கடைகளில் உள்ள பொருட்களை நீங்களே எடுத்து செல்லுங்கள் அதன்பின்னர் நாங்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி கொள்கிறோம் என்று அதிகாரிகள் கூறினர். பின்னர் வியாபாரிகள் பொருட்களை எடுத்து சென்றனர். அதன்பின்னர் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.