செய்திகள்

சாட்சி விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு: கடலூர் கோர்ட்டு உத்தரவு

Published On 2016-05-27 11:15 IST   |   Update On 2016-05-27 11:15:00 IST
கடலூர் மாவட்டத்தில் சாட்சி விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கடலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கடலூர்:

கடலூர் புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் 5 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த திலகவதி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக கடலூர் 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சாட்சி விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதையடுத்து இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு மோகன் உத்தரவிட்டார். தற்போது இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் திருச்சி உறையூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News