செய்திகள்

உண்மையான விவசாயிகளை கண்டறிந்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

Published On 2016-05-26 07:03 IST   |   Update On 2016-05-26 07:03:00 IST
உண்மையான விவசாயிகளை கண்டறிந்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
ஆலந்தூர் :

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவ பொது நுழைவுத்தேர்வு பற்றி உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செயல்படவேண்டி உள்ளது. மாநில அரசுகளின் விருப்பங்களை கவனத்தில் கொள்ளப்படும். வரும் ஆண்டுகளில் கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

குளச்சல் துறைமுகம் உறுதியாக கொண்டு வரப்படும். கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மட்டுமின்றி தமிழகம், இந்தியாவின் வளர்ச்சிக்கு குளச்சல் துறைமுகம் பயன்படும். இந்த துறைமுகத்தை எதிர்க்க சிலரை தவறாக வழிநடத்துகின்றனர். இது பற்றி முழுமையான ஆய்வு நடந்து வருகிறது. அதன் முடிவில் யார் பாதிக்கப்படுகிறார்கள்? என்பது தெரியவரும்.

பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். அது தற்போது நடந்து வருகிறது. கர்நாடக மாநில தேர்தலின் போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அகில இந்திய அளவிலான கட்சி அங்கீகாரத்தை காங்கிரஸ் இழக்கும்.

உண்மையான விவசாயிகளை அடையாளம் கண்டு அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். அரசு இதுபோன்ற திட்டங்களை கொண்டு வரும் போது ஆதாயம் பெறும் வகையில் இடைத்தரகர்கள் ஈடுபடுவது இயற்கை. இதை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News