செய்திகள்

மதுக்கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்படுவதால் புதுவையில் குவிந்த கடலூர் குடிமகன்கள்

Published On 2016-05-24 20:59 IST   |   Update On 2016-05-24 20:59:00 IST
தமிழகத்தில் காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் தற்போது மதியம் 12 மணிக்கு திறக்கப்படுவதால் கடலூர் மாவட்ட குடிமகன்கள் புதுவையில் குவிந்த தொடங்கினர்.
கடலூர்:

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட கடைகள் தற்போது மதியம் 12 மணிக்கு திறக்கப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் 225 மதுக்கடைகள் உள்ளன. இன்று 12 மணியளவில் இந்த கடைகள் திறக்கப்பட்டன.

வழக்கமாக டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு திறக்கப்படும். ஆனால் இன்று 12 மணிக்கு திறக்கப்பட்டதால் மது குடிப்பவர்கள் மனவருத்தம் அடைந்தனர்.

கடலூரில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்று காலை 10 மணிக்கு மதுப்பிரியர்கள் வந்தனர். கடை மூடிக்கிடந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். காலையிலேயே மது குடிக்காததால் அவர்களுக்கு கை நடுக்கம் ஏற்பட்டது. சிறிது நேரம் என்ன செய்யலாம் என்று யோசித்தபடி இருந்தனர்.

புதுவையில் உள்ள மதுக்கடைகள் காலை 9 மணிக்கு திறந்துவிடும். அங்கு சென்று மதுகுடிக்கலாம் என்று முடிவு செய்தனர். புதுவை எல்லையில் உள்ள கன்னியக்கோவிலில் உள்ள மதுக்கடைக்கு ஷேர் ஆட்டோவில் சென்றனர்.

இதேபோல் சோரியாங்குப்பத்தில் உள்ள மதுக்கடைக்கும் ஷேர் ஆட்டோக்களில் கூட்டம் கூட்டமாக சென்றனர். நெல்லிக்குப்பம், ரெட்டிச்சாவடி, கடலூர்சாவடி ஆகிய பகுதிகளில் உள்ளவர்களும் புதுவையில் உள்ள மதுக்கடைக்கு படையெடுத்தனர்.

இதனால் அங்குள்ள மதுக்கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. மது விற்பனை அமோகமாக இருந்தது. அந்த பகுதி திருவிழா கூட்டம் போல் கலகலப்புடன் காணப்பட்டது. அங்கேயே மதுக்குடித்தவர்கள் தங்கிவிட்டனர். அதனால் எங்கு பார்த்தாலும் குடிமகன்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது.

கடலூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கும் நேரம் மாற்றப்பட்டதால் விற்பனை குறைய வாய்ப்பு உள்ளது.

எனவே புதுவையில் மதுக்கடைகளில் விற்பனை களைகட்டும். காலையிலேயே குடிமகன்களுக்கு மது விற்பதற்காக சிலர் புதுவையில் இருந்து கடலூருக்கு மதுப்பாட்டில்களை அதிக அளவில் கடத்திவர வாய்ப்புகள் உள்ளது.

இதைதடுக்க ரெட்டிச்சாவடி, ஆல்பேட்டை, உண்ணாமலை செட்டிச் சாவடி, மருதாடு, மேல்பட்டாம்பாக்கம், வான்பாக்கம், அழகியநத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி மதுப்பாட்டில்களை கைப்பற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 225 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவைகளில் விற்பனை குறைவு மற்றும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்ற 75 கடைகளை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

Similar News