செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே கழுத்தை அறுத்து பெண் படுகொலை

Published On 2016-05-24 12:02 IST   |   Update On 2016-05-24 12:05:00 IST
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கத்தில் தனியார் வீட்டுமனை காலியிடத்தில் மர்ம முறையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கத்தில் தனியார் வீட்டுமனை காலி இடம் உள்ளது. இன்று காலை அங்கு இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கருப்பையா மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

கொலையுண்டு கிடந்த பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. மஞ்சள் நிற ஜாக்கெட்டும், பச்சை நிற சேலையும் அணிந்து இருந்தார்.

அவரது கழுத்து அறுக்கப்பட்டு முகத்திலும் பலத்த காயம் இருந்தது. எனவே மர்ம நபர்கள் அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்து உள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கொலையுண்டவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மாயமானவர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து வருகின்றனர்.

Similar News