செய்திகள்

எடை எந்திரத்தை திருத்தி நெல்கொள்முதல்: 3 லாரிகளை சிறை பிடித்து விவசாயிகள் போராட்டம்

Published On 2016-05-22 22:31 IST   |   Update On 2016-05-22 22:31:00 IST
எடை எந்திரத்தை திருத்தி நெல் கொள்முதல் செய்ய வந்த 3 லாரிகளை சிறை பிடித்து விவசாயிகள் போராட்டம் ஈடுபட்டனர்.
மதுராந்தகம்:

அச்சரப்பாக்கம், மதுராந்தகம் உள்ளிட்ட சுற்றுப்புற விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை சிலாவட்டத்தில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அச்சரப்பாக்கத்தை அடுத்த திம்மாவரம் ஊராட்சி பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொடுக்கும் அதே விலைக்கே வியாபாரிகள் சிலர் நெல் மூட்டைகள் வாங்கினர். இதனால் பயண தூரம், வாடகையை கணக்கிட்டு விவசாயிகள் கடந்த சில மாதங்களாக அவர்களிடமே நெல் விற்றனர்.

இந்த நிலையில் இன்று காலை 3லாரிகளுடன்வியாபாரிகள் சிலர் திம்மா வரம் கிராமத்திற்கு நெல் கொள்முதல் செய்ய வந்தனர். அப்போது அவர்கள் பயன்படுத்திய எடை எந்திரத்தை விவசாயிகள் சோதனை செய்த போது அதனை திருத்தி மாற்றி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதன் மூலம் ஒரு மூட்டைக்கு சுமார் 25 கிலோ வரை கூடுதலாக நெல் கொள்முதல் செய்திருப்பது தெரிந்தது.  இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நெல் கொள்முதல் செய்ய வந்த 3 லாரிகளை சிறை பிடித்தனர். உடனே அங்கிருந்த வியாபாரிகள் தப்பி சென்று விட்டனர்.

ஏற்கனவே கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை கணக்கிட்டு உரிய பணத்தை வழங்க வேண்டும். வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுபற்றி அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.  அவர்கள் விவாசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Similar News