தாசில்தார் மீது பணம் வீச்சு: பா.ம.க. வேட்பாளர் மீது 6 பிரிவுகளில் வழக்கு
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போட்டியிடுவதால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. இங்கு பா.ம.க. வேட்பாளராக வக்கீல் பாலு போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க. மற்றும். தி.மு.க. சார்பில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்தும்படியும், பா.ம.க. வேட்பாளர் வக்கீல் பாலு உளுந்தூர்பேட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முகுந்தனிடம் புகார் மனு கொடுத்திருந்தார்.
இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் பா.ம.க. வேட்பாளர் பாலு 20–க்கும் மேற்பட்ட பெண்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலரை சந்திக்க உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் வந்தார். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் முகுந்தன் வெளியே சென்றிருந்தார்.
எனவே அங்கு பணியில் இருந்த தாசில்தார் ராஜேந்திரனிடம், பா.ம.க. வேட்பாளர் பாலு, ‘வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது குறித்து புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?’ எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதற்கு தாசில்தார் ராஜேந்திரன், ‘இது பற்றி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டால்தான் விவரம் தெரியும்’ என்றார்.
இதனால் ஆத்திரமடைந்த வக்கீல் பாலு, கையில் கத்தை, கத்தையாக வைத்திருந்த பணத்தை தாசில்தார் தலையில் கொட்டியதுடன் அவர் மீது ரூபாய் நோட்டுக்களை வீசினார்.
தொடர்ந்து வேட்பாளர் பாலு, தாசில்தாரிடம் ‘அ.தி.மு.க., தி.மு.க.வினர் செய்து வரும் பணப்பட்டு வாடாவை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் பெண்களை திரட்டி தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவேன்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேர்தலை நிறுத்த கோரியும், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடருவேன்’ எனக்கூறி விட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டுச்சென்றார்.
இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தன் மீது பணம் வீசப்பட்டது குறித்து தாசில்தார் ராஜேந்திரன் உளுந்தூர் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் பா.ம.க. வேட்பாளர் பாலு உள்பட 47 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அனுமதியின்றி கும்பலாக கூடுதல், அத்துமீறி அரசு அலுவலகத்துக்குள் நுழைதல், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக திட்டுவது உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.