வாக்குப்பதிவு செய்திட என்னென்ன ஆவணங்கள் தேவை: ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு
ராமநாதபுரம்:
வாக்காளர் அடையாளச் சீட்டு பெற இயலாத நபர்கள் வாக்குப்பதிவு செய்திட தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்திய தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவில் வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் தங்களது அடையாளத்தை மெய்ப் பித்திட ஏதுவாகவும், ஆள் மாறாட்டத்தினை தவிர்த்திடும் வகையிலும் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள சீட்டு வழங்கிட உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு மே5–ந்தேதி முதல் வாக்காளர் அடையாளச்சீட்டு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டு இது வரை 90.42 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத காரணங்களினால் வாக்காளர் அடையாளச் சீட்டு பெற இயலாத நபர்கள் கீழ்காணும் 11 ஆவணங்களில் ஏதாவதொன்றினை அளித்து வாக்குப்பதிவு செய்யலாம்.
பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்பட சீட்டு மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற,சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை ஆகியவையாகும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.