செய்திகள்

ஊட்டி அருகே மீட்கப்பட்ட குட்டி யானை சிகிச்சைக்காக வண்டலூர் பூங்கா கொண்டு வரப்பட்டது

Published On 2016-05-15 08:09 IST   |   Update On 2016-05-15 08:09:00 IST
ஊட்டி அருகே மீட்கப்பட்ட குட்டி யானை உயர் சிகிச்சைக்காக வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.
வண்டலூர்:

ஊட்டியை அடுத்த கூடலூர் வட்டம், ஹைடகொள்ளி காப்பு நிலப்பகுதியில் தாய் யானையால் கைவிடப்பட்ட 6 மாத பெண் குட்டி யானையை வனப் பணியாளர்கள் கண்டனர். இந்த குட்டி யானையை தாயுடன் சேர்ப்பதற்கு 2 நாட்கள் அங்கேயே வைத்து இருந்தனர். ஆனால் தாய், யானை குட்டியை தேடி வராததாலும் குட்டி யானை மிகவும் சோர்வடைந்து விட்டதாலும் கடந்த 11-ந் தேதி முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

யானை குட்டியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் உயர் சிகிச்சைக்காக வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு நேற்று வேன் மூலம் கொண்டு வரப்பட்டது.

பூங்காவில் தற்போது குட்டி யானை உணவு உட்கொள்வதை தவிர்ப்பதாலும் தாய்ப்பால் இல்லாததாலும் மிகவும் சோர்வுடன் காணப்படுகிறது. தாய்ப்பாலுக்கு பதிலாக தூய்மையான சுடுநீரில் கலக்கப்பட்ட லேக்டோஜன் மற்றும் குளுக்கோஸ் யானை குட்டிக்கு வழங்கப்படுகிறது.

மேலும் இளநீரும் வழங்கப்படுகிறது. குட்டி யானையின் பயண களைப்பு குறைந்து உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டவுடன் உயர் சிகிச்சைக்கான நடவடிக்கை தொடங்கப்படும்.

புதியதாக வந்த யானைக்குட்டியை பூங்காவில் உள்ள மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Similar News