செய்திகள்

தமிழகத்தில் பிரசாரம் ஓய்ந்தது

Published On 2016-05-15 03:44 IST   |   Update On 2016-05-15 03:44:00 IST
தமிழகத்தில் அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை:

தமிழகத்தில் 15-வது சட்டசபையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது.

மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி முடிவடைந்தது. மொத்தம் 3,776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு, அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க- மக்கள் நலக்கூட்டணி - த.மா.கா., பா.ஜ.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி என 6 முனைப்போட்டி நிலவுகிறது. வேட்பாளர்கள் அதிகம் பேர் தேர்தல் களத்தில் இருப்பதால், பிரசாரமும் ஒரு மாதத்திற்கு முன்பே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.

போட்டி போட்டுக்கொண்டு அரசியல் தலைவர்களும், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் இறங்கியதால், சூடுபறந்த வெயிலுக்கு மத்தியில் பிரசாரமும் அனல் பறந்தது.

பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், கடந்த சில நாட்களாக ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் சென்னையில் பிரசாரம் மேற்கொண்டனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்துடன் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

பா.ம.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரத்திலும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையிலும் இறுதிக்கட்டமாக பிரசாரம் செய்தனர்.

தேர்தல் பிரசாரத்தின் இறுதிநாள் என்பதால், நேற்று ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களும் தங்கள் தொகுதிகளில் அதிகாலை முதலே பிரசாரத்தை தொடங்கினார்கள். இடைவிடாமல், வீதி வீதியாக சென்றவர்கள், வீடு, வீடாகவும் சென்று பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனர்.

இந்த நிலையில், சரியாக நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது. அதற்குள் வேட்பாளர்கள் அனைவரும் தங்களது பிரசாரத்தை முடித்துக்கொண்டனர். கடந்த ஒரு மாதமாக அனல் பறந்த பிரசாரமும் முடிவுக்கு வந்தது. ‘அன்பார்ந்த வாக்காள பெருமக்களே...’ என்ற ஒலிபெருக்கி கோஷமும் மறைந்து நிசப்தமானது.

நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. உணவு இடைவேளையின்றி மாலை 6 மணி வரை, அதாவது 11 மணி நேரம் தங்குதடையின்றி வாக்குப்பதிவு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Similar News