செய்திகள்

அ.தி.மு.க., தி.மு.க.வை வீழ்த்தாவிட்டால் ஆண்டவனே வந்தாலும் ஊழலை ஒழிக்கமுடியாது: ஜி.கே.வாசன் பிரசாரம்

Published On 2016-05-12 20:56 IST   |   Update On 2016-05-12 20:56:00 IST
அ.தி.மு.க., தி.மு.க.வை வீழ்த்தாவிட்டால் ஆண்டவனே வந்தாலும் ஊழலை ஒழிக்கமுடியாது என்று அறந்தாங்கியில் ஜி.கே.வாசன் பிரசாரத்தில் கூறினார்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி தே.மு.தி.க-மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. கூட்டணியின் வேட்பாளரைஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆவுடையார்கோவில் கடை வீதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நல்ல கட்சி, நல்ல கூட்டணி தே.மு.தி.க.,மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா.கூட்டணி. இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் அரசியலில் ஊழலற்ற, நேர்மையான இளைய தலைவர்களை எதிர் பார்க்கின்றனர்.  அவர்கள் இந்த கூட்டணியில்தான் இருக்கின்றனர். இதனால் தமிழகத்தில் தே.மு.தி.க. மக்கள்நலக் கூட்டணி, த.மா.கா. கூட்டணி ஆட்சி மலரும் என்பதில் ஐயமில்லை. இந்த சூழலை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டுள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மக்களை குழப்ப நினைக்கின்றனர்.

கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடத்துகின்றனர். கருத்து கணிப்பு என்பது இறுதியில் மக்கள்கணிப்பாக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான கருத்துக்கணிப்பு.

தமிழகத்திலேயே நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நல்லாட்சி நடைபெற உள்ளது. விவசாயக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். தமிழகத்தில் சாம் ராஜ்யங்களுக்கும், ஊழல் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த கூட்டணியால் அ.தி.மு.க. தி.மு.க.வை வீழ்த்த முடியா விட்டால், இனி ஆண்டவனே வந்தாலும் ஊழலை ஒழிக்க முடியாது.

தமிழகத்தில் மது விற்பனையைகொண்டு வந்த தி.மு.க.வும், மது விற்பனையை பிரபலப்படுத்திய அ.தி.மு.க. வும் மதுவிலக்கை கொண்டு வரமுடியாது. ஆனால் மக்கள் நலக் கூட்டணியால் மட்டுமே மதுவிலக்கை கொண்டு வர முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News