செய்திகள்

நடிகை குஷ்பு மீதான வழக்கு: திருநங்கைகளிடம் விசாரணை

Published On 2016-05-07 08:01 IST   |   Update On 2016-05-07 08:01:00 IST
நடிகை குஷ்பு மீதான வழக்கில் திருநங்கைகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மதுரை:

மதுரையைச் சேர்ந்தவர் திருநங்கை பாரதி கண்ணம்மா. இவர் மதுரை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி ஒரு ஆங்கிலப்பத்திரிகைக்கு நடிகை குஷ்பு பேட்டி அளித்துள்ளார். அதில், திருநங்கைகள் தேர்தலில் போட்டியிட அனுபவம் இல்லாதவர்கள். அவர்கள் உடனடியாக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. ஆக ஆசைப்படுகிறார்கள் என்று திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமாக கூறி இருக்கிறார். இந்தியாவில் உள்ள திருநங்கைகளில் நான் மட்டுமே எம்.பி. தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட வேட்பாளர். என்னை சுட்டிக்காட்டியே இந்த பேட்டியை குஷ்பு கூறியிருக்கிறார். திருநங்கைகள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வாக்குகள் பெறக்கூடாது என்ற உட்கருத்துடன், அரசியல் கட்சியின் தூண்டுதலின்பேரில் அவர் பேசியிருக்கிறார். எனவே அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 499, 500, 501, 504 ஆகிய பிரிவுகளின்கீழ் தண்டனை வழங்கி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் பாரதிகண்ணம்மா, அனுசுயா உள்பட சில திருநங்கைகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இந்த வழக்கை 31-ந்தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட்டு சி.ஆர்.கவுதமன் உத்தரவிட்டார்.

Similar News