செய்திகள்

பணப்பட்டுவாடாவை தடுக்க 94 தொகுதிகளில் கூடுதல் பறக்கும் படைகள்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

Published On 2016-05-07 05:08 IST   |   Update On 2016-05-07 05:08:00 IST
பணப்பட்டுவாடாவை தடுக்க 94 தொகுதிகளில் கூடுதல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.
சென்னை:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஓட்டுப்போடுவதற்கு பணம் வாங்க மாட்டோம் என்று வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் புதிய முறையை கொண்டு வந்துள்ளது. அதன்படி வருகிற 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள 66 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் ‘ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம், பணம் கொடுக்க வருபவர்களை பிடித்து போலீசில் ஒப்படைப்போம்’ என்ற வாசகங்கள் கொண்ட உறுதிமொழி எடுக்கப்படுகிறது.


ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 50 வாக்காளர்கள் இந்த உறுதிமொழியை ஏற்பார்கள். இதே போல அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம், தேர்தல் அதிகாரி அலுவலகம், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், டாக்டர்கள் சங்கம், நர்சுகள் சங்கம் உள்பட அனைத்து தரப்பினரும் சுமார் ஒரு கோடி பேர் உறுதி மொழி எடுக்க ஏற்பாடு செய்யுமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசியல் கட்சியினரையும் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்ற உறுதிமொழி எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், வாங்கினாலும் சிறை தண்டனை உண்டு.

வாக்குகளை எண்ணுவதற்காக தமிழகம் முழுவதும் 68 ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரியலூரில் நேற்று ரூ.23 லட்சம், திருவாரூரில் ரூ.17 லட்சம் ரொக்கத்தை வருமானவரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திண்டுக்கல்லில் ரூ.20 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் இதுவரை ரூ.84 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக வருகிற 9 அல்லது 10-ந்தேதிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் நசீம் ஜைதி வரலாம். அவருடைய பயண விவரம் இன்னும் இறுதியாகவில்லை.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக வாக்குப்பதிவுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு அதாவது வருகிற 13-ந்தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

தமிழகத்தில் பணம் நடமாட்டம் அதிகமுள்ளதாக கருதப்படும் 94 தொகுதிகளில் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் ஆகும். இந்த தொகுதிகளில் தலா ஒரு பார்வையாளர் வீதம் 94 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் செய்யும் செலவுகளை கண்காணிப்பார்கள். இதுதவிர 94 தொகுதிகளிலும் பறக்கும் படையின் எண்ணிக்கை 5-லிருந்து 6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் பறக்கும் படை எண்ணிக்கை 5 ஆக இருக்கும். மேலும் பயிற்சியில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் 42 பேர் மத்திய பார்வையாளர்களாக வருகிற 12-ந்தேதி தமிழகம் வருகிறார்கள்.

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 30 ஆயிரம் துணை ராணுவத்தினர் வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வந்து விட்டனர். தற்போது பறக்கும் படையில் மாநில போலீசார் தான் உள்ளனர். துணை ராணுவத்தினர் தமிழகத்துக்கு வர வர அவர்கள் பறக்கும் படையில் சேர்க்கப்படுவார்கள். ஒரு பறக்கும் படைக்கு ஒரு துணைராணுவ வீரர் வீதம் இடம் பெறுவார். துணைராணுவத்தினர் பணியில் சேர்ந்த பிறகு பறக்கும் படையில் மாநில போலீசார் விலக்கி கொள்வார்கள்.

கூட்டுறவு வங்கிகளை கண்காணிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு காரணம் கூட்டுறவு வங்கிகள் கணினி மயமாக்கப்படவில்லை. எனவே யார்? எவ்வளவு பணம் எடுக்கிறார்கள்? எவ்வளவு பணம் போடுகிறார்கள் என்ற விவரம் வெளியே தெரியாது. எனவே செலவின பார்வையாளர்களை தங்கள் பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பணபரிமாற்றத்தை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ களை தேர்தல் ஆணையம் வீடு வீடாக வழங்கி வருகிறது. அரசியல் கட்சியினர் ‘பூத் சிலிப்’ வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். ஒருவேளை அரசியல் கட்சியினர் வழங்கும் ‘பூத் சிலிப்’பில் சின்னங்கள் இருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும்.

செல்போன்களுக்கு ‘ஸ்கிராட்ச் கார்டு’ மற்றும் இ.சி.எஸ். மூலம் டாப்-அப் செய்யப்படுகிறது. இதுதவிர ஆன்லைனின் மூலமும் செல்போன்களுக்கு டாப்-அப் செய்யப்படுகிறது. ஒரு பகுதியில் அதிகபட்சமாக யாராவது ஆன்லைனில் டாப்-அப் செய்கிறார்களா? என்று கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 50 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் டாப்-அப் செய்துள்ளனர். அவர்களின் விவரங்களை செல்போன் நிறுவனங்கள் கொடுத்துள்ளன. அது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்.

கள்ளஓட்டு போடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டுப்போடுபவர்கள் பிடிபட்டால் அவர்கள் அங்கேயே கைது செய்து நேரடியாக போலீஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுவார்கள். கள்ள ஓட்டு போடுபவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News