செய்திகள்

மிளகாய், பருத்திக்கு சேமிப்பு கிடங்கு அமைத்து தருவேன்: தி.மு.க. வேட்பாளர் சித்ராசெல்வி பேச்சு

Published On 2016-05-06 22:36 IST   |   Update On 2016-05-06 22:36:00 IST
சாலைக்கிராமம் பகுதியில் மிளகாய், பருத்தி ஆகியவற்றிக்கு சேமிப்பு கிடங்கு அமைத்து கொடுப்பேன் என்று தி.மு.க. வேட்பாளர் சித்ரா செல்வி தெரிவித்தார்.
மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சித்ராசெல்வி தலைமையில் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையொட்டி இளையான்குடி ஒன்றியம் குயவர்பாளையத்தில் இருந்து நேற்று வேட்பாளர் சித்ராசெல்வி பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அங்கிருந்து சாலைக்கிராமம், நடுவலசைக்காடு, வாணியக்குடி, பூலாங்குடி, முத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்தார்.

பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:-

இந்த பகுதியில் பருத்தி, மிளகாய் அதிகளவு விளைகிறது. போதிய அளவில் விளைச்சல் இருந்தாலும் அவற்றை பதப்படுத்தி வைக்க சேமிப்பு கிடங்கு வசதி இல்லை. நான் வெற்றி பெற்றால் இந்த பகுதியில் வேளாண் மையம் மூலம் மிளகாய், பருத்தி ஆகியவற்றை சேமிக்க கிட்டங்கி வசதி ஏற்படுத்தி கொடுப்பேன். மேலும், சேமிப்பு கிடங்கில் பொருட்கள் இருப்பிற்கு ஏற்ப கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க ஏற்பாடு செய்வேன்.

தடையின்றி காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். சாலைக் கிராமத்தில் இருந்து சிவகங்கைக்கு போதிய பஸ் வசதி இல்லை. அரசு போக்குவரத்து கழகம் மூலம் கூடுதல் பஸ் வசதிகள் ஏற்படுத்தி தருவேன். இப்பகுதி மாணவ-மாணவிகள் கல்விக்காக இங்கு பொறியியல் கல்லூரி ஏற்படுத்துவேன்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., குரூப் 1 போன்ற உயர் பதவிகளுக்கு செல்ல இப்பகுதி மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி பெற தேவையான நடவடிக்கை எடுப்பேன். பிரசாரத்தின் போது வேட்பாளருடன் ஒன்றிய செயலாளர்கள் மதியரசன் (கிழக்கு), செல்வராஜ் (மேற்கு), தாயமங்கலம் ஊராட்சி கிளை செயலாளர் சத்தியேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News