செய்திகள்

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி செயற்கைகோள் 28-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

Published On 2016-04-25 06:34 IST   |   Update On 2016-04-25 06:34:00 IST
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி. சி-33 ராக்கெட் மூலம் வரும் 28-ந் தேதி (வியாழக்கிழமை) பகல் 12.50 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
சென்னை :

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. தெற்கு ஆசியாவில் உள்ள கடல் ஆராய்ச்சிக்காக ரூ.1,420 கோடி மதிப்பில் 7 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி, ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

அந்தவகையில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஏ, மற்றும் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-பி, அக்டோபர் 16-ந் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி, கடந்த ஆண்டு மார்ச் 28-ந் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-டி, கடந்த ஜனவரி 20-ந் தேதி ஐ.ஆர்.என்.எஸ். 1-இ, கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எப் செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து இந்த வரிசையில் கடைசி செயற்கைகோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி, பி.எஸ்.எல்.வி. சி-33 ராக்கெட் மூலம் வரும் 28-ந் தேதி (வியாழக்கிழமை) பகல் 12.50 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி செயற்கைகோள் கடல்வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்படுகிறது. இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கு இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் 1,500 கிலோமீட்டர் சுற்றளவு பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும்.

மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும். இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள்.

முன்னதாக ராக்கெட்டை செலுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக நைட்ரஜன் கலப்பு ஆக்சைடுகள், மோனோ மீத்தேல் போன்றவை ராக்கெட்டில் நிரப்பும் பணி நடந்து வருகிறது. இதற்கான ‘கவுண்ட்டவுன்’ வரும் 26-ந் தேதி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடந்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

Similar News