சிவகங்கையில் ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் கொள்ளை முயற்சி
சிவகங்கை :
சிவகங்கை நகர் கோகலே ஹால் ரோட்டில் வசிப்பவர் ராமச்சந்திரன். இவர் ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரி. நேற்று முன்தினம் மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்குவதை பார்க்க குடும்பத்துடன் ராமச்சந்திரன் மதுரை வந்தார்.
இதனை அறிந்த 3மர்ம மனிதர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அவர்கள் வீட்டின் கதவை கடப்பாரையால் உடைத்துள்ளனர். இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ராமச்சந்திரனை செல்போனில் தொடர்பு கொண்டனர்.
அப்போது அவர் மதுரையில் இருப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் கொள்ளையர்களை பிடிக்க திட்டமிட்டு சத்தம் எழுப்பினர்.
இது குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் பொதுமக்கள் திரண்டதால் 3 கொள்ளையர்களும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அப்போது ஒருவன் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்தபோது கால் முறிவு ஏற்பட்டு பொது மக்களிடம் சிக்கினான். அவனுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சிவகங்கை நகர் போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவனது பெயர் பாண்டி (வயது28) என்பதும், பரமக்குடியை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய 2 பேர் பெயர் தங்கராஜ், பாலாஜி என்றும், திருப்புவனத்தை சேர்ந்தவர் என்றும் பாண்டி தெரிவித்தான். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சரியான நேரத்தில் பொதுமக்கள் திரண்டு கொள்ளையர்களை பிடிக்க முயன்றதால் வீட்டிலிருந்த எந்த பொருட்களும் கொள்ளை போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.