தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் புழல் பைபாஸ்சாலை மேம்பாலத்தில் இருந்து கிழே விழுந்த 2 வாலிபர்கள்
- படுகாயம் அடைந்த கோகுல், சரத் ஆகியோர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
- போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கொளத்தூர்:
விழுப்புரத்தைச் சேர்ந்த வர்கள் உதயா (19), கோகுல் (23), சரத் (20). இவர்கள் அம்பத்தூர் அருகே தங்கி தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்கள்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தாம்பரம்-புழல் பைபாஸ் சாலையில் வந்தனர். உதயா மோட்டார் சைக்கிளை ஓட்டினார். புழல் பைபாஸ் சாலை முடிவில் கொல்கத்தா நெடுஞ்சாலையில் இறங்கு வதற்கு மேம்பாலத்தில் வந்து கொண்டு இருந்த போது வளைவில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த கோகுல், சரத் ஆகிய இருவரும் தூக்கிவீசப்பட்டு 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். உதயா மேம்பாலத்திலேயே விழுந்ததால் லேசான காயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த கோகுல், சரத் ஆகியோர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.