பேட்டரி வெடித்து 2 மாணவர்கள் காயம்
- ராயக்கோட்டை அருகே பேட்டரி வெடித்து 2 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
- ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
ராயக்கோட்டை அருகே உள்ள நாகமங்கலம் அடுத்த நீலகிரி கிராமத்தை சேர்ந்தவர் முனிசந்திரன். இவருடைய மகன் சரண் வயது 12. பேரிகை அருகே உள்ள சூடுகொண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வருகிறார். காலாண்டு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த மாணவன் ஆசிரியர்கள் கூறியதால் புராஜக்ட் செய்தார்.
அவரது தந்தை வாங்கி கொடுத்த பேட்டரியை வைத்து மாணவன் சரண் புராஜக்ட் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது உறவினரான அடவிசாமிபுரத்தை சேர்ந்த அரசு பள்ளியில் 5 ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிஸ் வயது 10 என்பவர் சரணுடன் இருந்தார்.
பேட்டரியை கனெக்ட் செய்த போது வெடித்து சிதறியது. அப்போது பேட்டரியை கையில் வைத்திருந்த மாணவன் ஹரிசின் இரு விரல்கள் துண்டானது. மாணவன் சரணின் மணிக்கட்டு பகுதியில் காயம் ஏற்பட்டது.
மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் மாணவர்களை மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.