உள்ளூர் செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

Published On 2023-11-13 03:35 GMT   |   Update On 2023-11-13 03:35 GMT
  • விமானத்தில் வரும் பயணிகள் தங்கத்தை அதிக அளவில் கடத்தி வருகின்றனர்.
  • சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி:

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது . இந்த விமானத்தில் வரும் பயணிகள் தங்கத்தை அதிக அளவில் கடத்தி வருகின்றனர்.

இதை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய வருவாய் நுண்ணறிவு அதிகாரிகளும் திடீர் சோதனையில் ஈடுபட்டு தங்கம் கடத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களுக்கு அதிக அளவில் தங்கத்தின் தேவை ஏற்பட்டுள்ள காரணத்தினால் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும் தங்க நகைகளை வாங்குவதிலும் நகை கடைகளை அதிக அளவில் பொதுமக்கள் நாடிவந்தனர்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கத்தை கடத்தி வந்து விற்பனை செய்து வருவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்டதை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடலில் மறைத்து பேஸ்ட் வடிவில் 995 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து அவரிடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 67.42 லட்சம் என தெரிய வருகிறது.

இதேபோன்று சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது இவரை அழைத்து சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் நகை வடிவில் மறைத்து எடுத்து வந்த 94 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு ரூபாய் 47.75 லட்சம் ஆகும். இதையடுத்து அவரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூபாய்1.08 கோடி மதிப்பிலான ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News