உள்ளூர் செய்திகள்

கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டிய ஷா நவாஸ் எம்.எல்.ஏ.

கோதண்டராஜபுரம் பள்ளிக்கு 2 வகுப்பறை கட்டிடம்-ஷா நவாஸ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

Published On 2023-02-08 15:01 IST   |   Update On 2023-02-08 15:01:00 IST
  • வகுப்பறை கட்டடம் இன்றி மாணவ ர்களும், ஆசிரியர்களும் அவதி அடைவதாக பொதுமக்கள் முறையிட்டனர்.
  • கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்ட நிலையில், தனியார் கட்டிடத்தில் பள்ளி இயங்கி வந்தது.

நாகப்பட்டினம்:

திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி, கோதண்டராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்ட நிலையில், தனியார் கட்டிடத்தில் பள்ளி இயங்கி வந்தது.

இதை அறிந்த நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ், அண்மையில் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, வகுப்பறை கட்டடம் இன்றி மாணவர்களும், ஆசிரியர்களும் அவதி அடைவதாக பொதுமக்கள் முறையிட்டனர். உடனடியாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.23 லட்சம் மதிப்பீட்டில், 2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், வி.சி.க. மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News