உள்ளூர் செய்திகள்

ஓ.என்.ஜி.சி அதிகாரி வீட்டில் 18 பவுன் நகை திருட்டு: கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு

Published On 2022-09-18 08:14 GMT   |   Update On 2022-09-18 08:14 GMT
  • ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக, வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தோடு சென்றுவிட்டார்.
  • தொடர்ந்து நண்பர்களோடு கலந்து பேசி, நேற்று முன்தினம் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புதுச்சேரி:

காரைக்கால் நிரவி பகுதியில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி-யில், குருப் பொது மேலாளராகா பணியாற்றும் ஷடானனன்(59) என்பவர், காரைக்கால் பாரதி நகரில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர், கடந்த 3ந் தேதி, தனது சொந்த ஊரான கேரளாவில் உள்ள திருச்சூர் பட்டேபாடம் எனும் ஊருக்கு, ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக, வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தோடு சென்றுவிட்டார். மீண்டும் கடந்த 15ந் தேதி பகல் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, வீட்டில் வைத்திருந்த சிசி கேமராவை காண சென்றபோது, கேமராக்கள் உடைக்கப்பட்டு, அதன் அனைத்து பாகங்களும் திருடு போய் இருந்தது.

பின்னர், வீட்டில் சென்று பார்த்தபோது, வீட்டு அலமாரிகளில் வைத்திருந்த தங்க செயின், மோதிரம், வளையல், தோடு உள்ளிட்ட 18 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கம், மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போய் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நண்பர்களோடு கலந்து பேசி, நேற்று முன்தினம் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, கைரேகை நிபுணர்களை அழைத்து, வீட்டின் பல இடங்களில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்து, வீட்டு பூட்டை உடைத்து, 18 பவுன் தங்க நகைகள், பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை தனிப்படை அமத்து தேடிவருகின்றனர். இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News