உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் ரூ.17.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

Published On 2023-07-04 14:42 IST   |   Update On 2023-07-04 14:42:00 IST
  • 400 ஆதிதிராவிடர் நல மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.6.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
  • 27 பயனாளிகளுக்கு ரூ.17.70 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் சவுந்தரபாண்டியன் வழங்கினார்.

தருமபுரி,

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது நிறுவனங்கள் குழுத் தலைவரும் லால்குடி சட்டமன்ற உறுப்பினருமான சவுந்தரபாண்டியன் தலைமையில், குழு உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து, நல்லம்பள்ளி வட்டம், ஏ.ஜெட்டிஅள்ளியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் 400 ஆதிதிராவிடர் நல மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.6.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது குறித்தும்,

தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி வட்டங்களில் 1733.03 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தருமபுரி சிப்காட் தொழிற்பூங்கா தார்சாலையினையும், தருமபுரி வட்டம், மதிகோண்பாளையத்தில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், ரூ.3.79 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தருமபுரி நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகள் குறித்தும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது நிறுவனங்கள் குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

களஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது நிறுவனங்கள் குழு (2023-2024) தணிக்கை பத்திகள் மற்றும் தன்னாய்வு குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலக்டர் சாந்தி முன்னிலையில் நடைபெற்றது.

முன்னதாக, வருவாய்த்துறை, தாட்கோ உள்ளிட்ட துறைகளின் சார்பில் 27 பயனாளிகளுக்கு ரூ.17.70 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் சவுந்தரபாண்டியன் வழங்கினார்.

இந்நிகழ்வுகளின் போது, பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News