உள்ளூர் செய்திகள்

பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் செய்வதற்காக பக்தர்கள் வழங்கிய அரிசி சாதமாக தயாரிக்கும் பணி நடந்தது.

தஞ்சை பெரிய கோவிலில் 1500 கிலோ அரிசி சாதத்தால் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்

Published On 2023-10-28 09:39 GMT   |   Update On 2023-10-28 09:39 GMT
  • காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
  • ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர்:

உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துகாட்டாள விளங்குகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

பெரிய கோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கமும் என தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெருவுடையாருக்கு ஐப்பசி மாத பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறும்.

அதன்படி இன்று ஐப்பசி மாத பவுர்ணமி என்பதால் பிற்பகலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் வழங்கிய 1500 கிலோ அரிசி சாதமாக தயார் செய்யப்பட்டன. பின்னர் தயார் செய்யப்பட்ட சாதம் பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டன.

இதையடுத்து 500 கிலோ காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இரவில் லிங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட அன்னம் பக்தர்கள், கால்நடைகளுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

இரவு 7 மணி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இரவு சந்திரகிரகணம் என்பதால் 8 மணிக்கே நடை சாத்தப்பட உள்ளது.

Tags:    

Similar News