உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் இந்த ஆண்டு கூடுதல் விலைக்கு மது விற்ற 1,204 பேர் கைது

Published On 2023-07-27 14:31 IST   |   Update On 2023-07-27 14:31:00 IST
  • திருட்டுத்தனமாக மதுவிற்ற 2 நபர்கள் மீது ஓரண்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
  • குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அந்தந்த போலீஸ் நிலையங்களில் உள்ள போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு, திருட்டுத்தனமாக மது விற்பவர்களை தீவிரமாக கண்காணித்து குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு திருட்டுத்தனமாக அரசு மதுபானங்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்றதாக இதுவரை 1,196 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,204 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 17 ஆயிரத்து 110 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் திருட்டுத்தனமாக மதுவிற்ற 2 நபர்கள் மீது ஓரண்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 2 ஆதாய கொலை வழக்கு, 10 வழிப்பறி வழக்குகள், 23 வீடு புகுந்து திருடுதல் வழக்குகள் மற்றும் 65 திருட்டு வழக்குகள் என மொத்தம் 100 வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் களவுபோன சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 54 லட்சத்து 61 ஆயிரத்து 224 என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 19 வழக்குகள் தவிர மற்ற 81 வழக்குகள் துரிதமாக அறிவியல் நுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டு ரூ.1 கோடியே 46 லட்சத்து 1,324 மதிப்புள்ள சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சைபர்கிரைம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 20 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.23,55,448 பணம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை மற்றும், குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags:    

Similar News