உள்ளூர் செய்திகள்

தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சின்னமனூர் அருகே இருதரப்பினர் மோதலில் 12 பேர் படுகாயம் -8 போலீசாரும் காயம் அடைந்தனர்

Published On 2023-11-19 05:09 GMT   |   Update On 2023-11-19 05:09 GMT
  • கோஷ்டி மோதலில் கல், உருட்டுகட்டை, கம்பி உள்ளிட்ட பொருட்களால் தாக்கி கொண்டதில் 12 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • இந்த தாக்குதலில் போலீசார் 8 பேரும் காயம் அடைந்தனர்.

சின்னமனூர்:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசை பகுதியில் உள்ள பராசக்தி கோவிலை 75 ஆண்டுகளுக்கு மேல் இரு சமூகத்தினர் பராமரித்து வந்தனர். இதில் ஒரு தரப்பினர் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கோவில் முன்பு இருந்த காலி இடத்தில் கான்கிரீட் போட்டு கம்பிவேலி அமைத்தனர்.

ஆனால் இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் அந்த கம்பி வேலியை அவர்கள் அகற்றினர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இருதரப்பினரும் வாக்குவாதம் செய்து பின்னர் கல், உருட்டுகட்டை, கம்பி உள்ளிட்ட பொருட்களால் தாக்கி கொண்டனர்.

இந்த தாக்குதலில் பெண்கள் உள்பட 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் உத்தரவுப்படி ஏ.எஸ்.பி மதுக்குமாரி, சின்னமனுர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக செல்ல அறிவுறுத்தினர். இந்த தாக்குதலில் ஸ்ரீரங்கன், முருகன், தாமோதரன், தியாகராஜன், செந்தட்டி, செல்வக்குமார், செல்வி, முத்துக்குமார், அர்ச்சுணன், கலைவாணி, சீனியம்மாள், அழகுமலை, சிவா உள்பட 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் போலீசார் 8 பேரும் காயம் அடைந்தனர். இது குறித்து சின்னமனூர் போலீசார் பார்த்திபன், நவீன், சிவா, கண்ணன் உள்பட 11 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News