முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
100 நாள் வேலைகேட்டு நிலக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை
- பணிக்கு சென்ற கிராம மக்களை பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோர் வேலை செய்ய வேண்டாம் என கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
- 100 நாள் வேலை பயனாளிகள் தேர்வின் போது தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் எந்த தகவலும் கூறவில்லை.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே சிவஞானபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்ட பணி நடைபெற்று வருகிறது. அதன்படி பணிக்கு சென்ற கிராம மக்களை பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோர் வேலை செய்ய வேண்டாம் என கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் நிலக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பவம் குறித்து அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) விஜயசந்திரிகா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தங்களை 100 வேலை செய்யவேண்டாம் எனக்கூறி திருப்பி அனுப்பி விட்டதாக தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளிடம் உடனடியாக பணி வழங்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விஜயசந்திரிகா தெரிவித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து சிவஞானபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தியிடம் கேட்டபோது 100 நாள் வேலை பயனாளிகள் தேர்வின் போது தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் எந்த தகவலும் கூறவில்லை. இதனால் வேலை செய்ய நாங்கள் அனுமதிக்கவில்லை என தெரிவித்தார்.