செய்திகள்

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் தாசரி நாராயண ராவ் காலமானார்: பிரபலங்கள் இரங்கல்

Published On 2017-05-30 22:37 IST   |   Update On 2017-05-30 22:37:00 IST
பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் தாசரி நாராயண ராவ் ஐதரபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஐதராபாத்:

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் தாசரி நாராயண ராவ் உடல்நலக் குறைவால் ஐதரபாத்தில் காலமானார். 75 வயதான அவர், சுவாசக் கோளாறு மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

கடந்த 1974-ஆம் ஆண்டு `டாடா மனவாடு' என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் இயக்குனராக அறிமுகமான தாசரி, தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட 3 மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள இவர், இரு தேசிய விருதையும், பலமுறை மாநில விருதுகளையும் பெற்றிருக்கிறார். அதிக திரைப்படங்களை இயக்கதற்காக லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸிலும் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, நிலக்கரித் துறை இணை அமைச்சராக பணியாற்றினார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக தாசரி நாராயணராவ் சமீபத்தில் அறிவித்திருந்தார். தாசரி நாராயண ராவின் மறைவுக்கு ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News