செய்திகள்

ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவார் - எந்தக் கட்சியிலும் சேர மாட்டார்: திருநாவுக்கரசர் திட்டவட்டம்

Published On 2017-05-21 13:32 IST   |   Update On 2017-05-21 13:32:00 IST
நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சிதான் தொடங்குவார் வேறு எந்தக் கட்சியிலும் சேர மாட்டார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 26-வது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் இன்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மலர்தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். சமீபத்தில் பரபரப்பான விவாதப் பொருளாக மாறிவிட்ட நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடர்பான கேள்வியை அவரிடம் நிருபர்கள் முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர், ‘‘எனது நண்பர் என்ற முறையில் ரஜினிகாந்தை எனக்கு 35-40 ஆண்டுகளாக தெரியும். அரசியலுக்கு வருவதாக இருந்தால், எந்த தேசிய கட்சியிலோ, மாநில கட்சியிலோ அவர் சேருவார் என்று நான் கருதவில்லை. அவர் தனிக்கட்சிதான் தொடங்குவார். அப்படி புதிய கட்சியை தொடங்கினால் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்பதை அவரே முடிவு செய்வார்’’ என்று குறிப்பிட்டார்.

Similar News