செய்திகள்

தனுஷின் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published On 2017-05-09 21:57 IST   |   Update On 2017-05-09 21:57:00 IST
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் - அமலாபால் இணைந்து நடித்திருக்கும் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. 

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகமும் தற்போது தயாராகி உள்ளது. இப்படத்தை ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, வசனம் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். 

அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் என முதல் பாகத்தில் நடித்திருந்த பல்வேறு கதாபாத்திரங்கள் இப்படத்திலும் தொடர்கிறார்கள். தவிர நடிகை கஜோல் சுமார் 20 வருடங்களுக்கு பிறகு, இப்படத்தின் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி ஆகியிருக்கிறார். 

தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான `பா.பாண்டி' (`பவர் பாண்டி') படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அவரது நடிப்பில் உருவாகியுள்ள `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் கலைப்புலி எஸ்.தாணுவின் `வி' கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள `விஐபி-2' வருகிற ஜுலை 28-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளதாக நடிகர் தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். 


ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடித்திருக்கும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News