செய்திகள்

கேரளாவில் நடிகை பாவனாவை, காரில் கடத்தி பாலியல் தொல்லை

Published On 2017-02-18 10:14 IST   |   Update On 2017-02-18 10:14:00 IST
பிரபல நடிகை ஒருவரை மர்ம கும்பல் காருடன் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அவரை மிரட்டவும் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பாவனா.

இவர் தமிழில் தீபாவளி, சித்திரம் பேசுதடி, அசல், ஜெயம் கொண்டான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர், நடித்து வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பு திருச்சூர் அருகே நடந்து வருகிறது. இதில் பங்கேற்று விட்டு நடிகை பாவனா நேற்று இரவு காரில் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந் தார்.

கார் கொச்சியை அடுத்த அங்கமாலி அருகே சென்றபோது, இன்னொரு காரில் வந்த கும்பல் திடீரென பாவனாவின் காரை வழி மறித்தனர்.

அவர்கள் பாவனாவை மிரட்டி காருக்குள் ஏற்றிக்கொண்டனர். பின்னர் டிரைவரை மிரட்டி காரை தொடர்ந்து ஓட்டும்படி எச்சரித்தனர்.

அவர், காரை ஓட்டத் தொடங்கியதும் அந்த கும்பல் பாவனாவை மிரட்டியதோடு, அவருக்கு பாலியல் தொல்லையும் கொடுத்தனர். இதை அந்த கும்பல் செல்போனில் படம் எடுத்து கொண்டனர். அவர்களிடமிருந்து தப்பிக்க நடிகை பாவனா போராடினார். மேலும் செல்போன் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுக்க முயன்றார்.

இதற்குள் கார் கொச்சியை நெருங்கியது. பாலாரி வட்டம் சந்திப்பை அடைந்த போது, அந்த கும்பல் காரை நிறுத்தி கீழே இறங்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள், இன்னொரு காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

மர்ம கும்பலின் நடவடிக்கையால் அதிர்ச்சியில் உறைந்து போன நடிகை பாவனா, கொச்சி பகுதியில் வசித்து வரும் ஒரு டைரக்டரின் வீட்டிற்கு சென்றார்.

அவரிடம் மர்ம கும்பலால் காரில் கடத்தப்பட்ட தகவலையும், தனக்கு நேர்ந்த கொடுமையையும் கூறி அழுதார். அவர் உடனே இதுபற்றி பாலாரி வட்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் டைரக்டர் வீட்டிற்கு விரைந்து வந்தனர்.

அங்கு பீதியில் உறைந்திருந்த பாவனாவிடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தனர். மேலும் பாவனாவை கடத்திச்சென்ற கும்பல் பற்றியும், அதில் இருந்தவர்களின் அங்க அடையாளம் பற்றியும் விசாரித்தனர்.

இந்த விசாரணையில், போலீசாருக்கு நடிகை பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் மீது சந்தேகம் ஏற்பட்டது. கும்பல் தடுத்ததும் காரை வேகமாக ஓட்டிச் செல்லாமல் உடனே நிறுத்தியது ஏன்? என்று கேட்டனர்.

இதற்கு டிரைவர், அளித்த பதிலில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரை பிடித்துச் சென்ற போலீசார் அவரை வேலையில் சேர்த்து விட்ட ஏஜெண்டு சுனில் என்பவரையும் பிடித்தனர். அவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

பாவனா கடத்தப்பட்டதற்கு காரணம் என்ன? முன் விரோதத்தில் இந்த சம்பவம் நடந்ததா? இதற்கு முன்பு பாவனாவிடம் டிரைவராக வேலை பார்த்தவருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

பிரபல நடிகை ஒருவரை மர்ம கும்பல் காருடன் கடத்திச் சென்று பாலியல் தொல்லைகொடுத்ததோடு, அவரை மிரட்டவும் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை பாவனா விரைவில் திருமணம் செய்ய விருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Similar News