செய்திகள்
நிருபர்களுக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார். அருகில் நடிகர் சூரி உள்ளார்.

என் தந்தைக்கு கிடைத்த உன்னத பரிசு: உதயநிதி பேட்டி

Published On 2017-01-07 16:01 IST   |   Update On 2017-01-07 16:01:00 IST
தி.மு.க. செயல்தலைவர் பதவி வழங்கி இருப்பது என் தந்தையின் உழைப்புக்கு கிடைத்த உன்னத பரிசு என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘‘பொதுவாக என் மனசு தங்கம்’’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், நகைச்சுவை நடிகர் சூரி உள்பட பலர் நடித்து வருகிறார்கள்.

சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.

ஓய்வின் போது உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேள்வி:- மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க செயல் தலைவர் பதவி அளிக்கப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- எனது தந்தை மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அவருடைய உழைப்புக்கு கிடைத்த உன்னத பரிசு.

கேள்வி:- நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் நீங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் யாருக்கு ஆதரவு அளிப்பீர்கள்?

பதில்:- என்னுடைய படங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கமோ, நடிகர் சங்கமோ இதுவரை எந்த உதவியும் செய்தது கிடையாது. இதனால் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை.

கேள்வி:- ஜல்லிக்கட்டு பிரச்சனையில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்:- அரசியல் ரீதியாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகிறது. எனது தந்தை தலைமையிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் இதுகுறித்து நான் பேச விரும்பவில்லை. இருப்பினும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

கேள்வி:- பொதுவாக எம்மனசு தங்கம் படம் குறித்து?

பதில்:- நான் முதன் முதலாக வேறு தயாரிப்பாளர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். நானும் சூரியும் ஏற்கனவே 'சரவணன் இருக்க பயமேன்' என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தோம். அதன் பின்னர் இந்த படத்தில் மீண்டும் ஒன்றாக நடிக்கிறோம். தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு, தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

படம் நன்றாக வந்திருக்கிறது. இந்த படத்தில் நடிகர் பார்த்திபன் வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார். முதன்முதலாக அவருடன் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய நடிப்பில் வழக்கமாக இருக்கும் நக்கல் இந்த படத்திலும் நிறையவே எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News