இஸ்ரேல்- ஈரான் போர்: கடும் வீழ்ச்சியை சந்தித்த பங்குச் சந்தை..!
- மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 511.38 புள்ளிகள் சரிவை சந்தித்தது.
- இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 140.50 புள்ளிகள் சரிவை சந்தித்தது.
இஸ்ரேல்- ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியல் பதற்றமான நிலை உருவாகியுள்ளது. ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் உலகளவில் எரிபொட்களின் விலை கடுமையாக உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தக முடிவில் 511.38 புள்ளிகள் சரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 82,408.17 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று 700 புள்ளிகள் சரிவுடன் 81,704.07 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. குறைந்த பட்சமாக 81,476.76 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 82,169.67 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 511.38 புள்ளிகள் சரிந்து 81,896.79 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி இன்றைய வர்த்தகத்தில் 140.50 புள்ளிகள் சரிவை சந்தித்தது. கடந்த வெள்ளிக்கிழமை நிஃப்டி 25,112.40 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை சுமார் 75 புள்ளிகள் சரிந்து 24,939.75 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்த பட்சமாக 24,824.85 புள்ளிகலும், அதிக பட்சமாக 25,057.00 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 140.50 புள்ளிகள் சரிவடைந்து 24,971.90 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ஹெச்.சி.எல்.டெக், இன்போசிஸ், எல் அண்டு டி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, இந்துஸ்தான் யுனிலிவர், ஐடிசி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மாருதி நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
பாரத் எலக்ட்ரானிக்ஸ், பஜாஜ் பைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.