வணிகம் & தங்கம் விலை

வீடு, வாகனக் கடன்களுக்கான EMI குறைகிறது - ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI

Published On 2025-02-07 11:25 IST   |   Update On 2025-02-07 12:32:00 IST
  • அவரது தலைமையில் இன்று பணவியல் கொள்கை குழு (MPC) கூட்டம் நடைபெறுகிறது.
  • கார் கடன், வீட்டு கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி குறைந்து EMI குறையும்.

வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வீடு மற்றும் வாகனக் கடன் வாங்குபவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

சக்திகாந்த தாஸுக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கடந்த டிசம்பரில் பதவியேற்றார். அவரது தலைமையில் இன்று பணவியல் கொள்கை குழு (MPC) கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், ரெப்போ விகிதங்களை 25 அடிப்படைப் புள்ளிகள் (bps) குறைத்து 6.25 சதவீதமாக மாற்றும் முடிவை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதனால் வங்கிக் கடன் வாங்குபவர்களின் வட்டி, EMI குறைய வாய்ப்புள்ளது. கார் கடன், வீட்டு கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி குறைந்து EMI குறையும்.   

கடைசியாக கடந்த 2020 கோவிட் சமயத்தில் ரெப்போ விகிதத்தில் 40 அடிப்படைப் புள்ளிகளை, ரிசர்வ் வங்கி குறைத்தது. ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதம் ரெப்போ விகிதம் எனப்படும். 

இதற்கிடையே இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆர்பிஐ ஆளுநர், அடுத்த நிதியாண்டில் (2025-26) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் 4.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2025-26-ம் நிதியாண் டில் 4 காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி முறையே 6.7, 7, 6.5, 6.5 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பயிர் வருகையின் பின்னணியில் உணவு பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது பணவீக்கம் குறைந்துள்ளது. இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணிக் கொள்கை சீராக உள்ளது.

டிஜிட்டல் மோசடி அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. சைபர் மோசடிகளைச் சரிபார்க்க வங்கிகளுக்கு பிரத்யேக டொமைன் பெயர் இருக்க வேண்டும். இதன் பதிவு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்று கூறினார்.

Tags:    

Similar News