செய்திகள்
திருமாவளவன்

புதுவையை பா.ஜனதா கைப்பற்றினால் கலாசாரம்- பண்பாடு பாதிக்கப்படும்: திருமாவளவன்

Published On 2021-04-04 08:57 GMT   |   Update On 2021-04-04 08:57 GMT
தமிழகத்தில் ஏற்கனவே எடப்பாடி அரசாங்கத்தை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட்டனர். புதுவையில் கடந்த 5 ஆண்டுகளாக கவர்னர் மூலமாக அரசை முடக்கி வைத்திருந்தனர்.
புதுச்சேரி:

புதுவை காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் உழவர் கரை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.

அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று தொகுதி முழுவதும் பிரசாரம் செய்தார். ஜவகர்நகர் குடியிருப்பு பகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர், வீதி வீதியாக திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

கடந்த 2001-ம் ஆண்டு முதல் தேர்தலில் கூட்டணி சார்பில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்து வருகிறோம்.

இந்த முறை அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பதற்காக ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். கடந்த 5 நாட்களுக்கு முன்னர் ஏற்கனவே இந்த தொகுதியில் பிரசாரம் செய்தேன். தற்போது 2-வது முறையாக பிரசாரம் செய்கிறேன். இந்த முறை பானை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்து, சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். புதுவை அரசை சட்டமன்ற காலம் முடியும் சில நாட்களுக்கு முன்பு கலைத்தார்கள். அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து கலைத்தனர். பா.ஜ.க.வின் இந்த செயலுக்கு என்.ஆர். காங்கிரசும் அ.தி.மு.க.வும் ஒத்துழைப்பு அளித்தது.

தமிழகத்தில் மட்டுமன்றி, புதுவையையும் குறிவைத்து பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது. புதுவையை கைப்பற்றியே தீருவோம் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் ஏற்கனவே எடப்பாடி அரசாங்கத்தை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட்டனர். புதுவையில் கடந்த 5 ஆண்டுகளாக கவர்னர் மூலமாக அரசை முடக்கி வைத்திருந்தனர்.

புதுவையியில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி அரசு பணியாது என்பதால் புதுவையை கைப்பற்ற முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.



புதுவையை பா.ஜ.க. கைப்பற்றினால், புதுவை கலாசாரம் அரசியல் சமூகம் பாதிக்கப்படும். இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் ஒற்றுமையோடு வாழ்கின்ற நிலை மாறும். மத வெறி தூண்டப்படும், அமைதி சீர்குலைக்கப்படும்.

இதனால் பா.ஜ.க. ஆட்சி புதுவையில் அமையக் கூடாது புதுவையில் பா.ஜ.க.வை காலூன்ற செய்யக்கூடாது. நாம் நீண்டகாலமாக காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியோடு பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து இருக்கிறோம்.

கூட்டணியில் போட்டியிட தனித்தொகுதி வேண்டுமென கேட்டோம். ஆனால், தொகுதி ஒதுக்க முடியாத நிலையினால் பொதுத்தொகுதியை எங்களுக்கு அளித்துள்ளனர்.

நமக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர்கள் கோடி கோடியாக பணத்தை செலவு செய்கிறார்கள். நம்மால் அதுபோல் செலவு செய்ய முடியாது.

ஓட்டுக்கு காசு தர முடியாது. உங்களை நம்பிதான் போட்டியிடுகிறோம். லஞ்ச, ஊழலால் கோடி கோடியாக சம்பாதித்த பணத்தில் 1 சதவிகிதத்தை மட்டும் செலவு செய்கிறார்கள். பா.ஜ.க.வை தோளில் தூக்கி சுமக்கும் என்.ஆர். காங்கிரசுக்கும் பாடம் புகட்ட வேண்டும். விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
Tags:    

Similar News