ஐ.பி.எல்.(IPL)
அருப்புக்கோட்டை தொகுதி கண்ணோட்டம்
கடந்த முறை போட்டியிட்ட சாத்தூர் ராமச்சந்திரன், வைகைச்செல்வன் ஆகியோரே தற்போதும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் மீண்டும் களம் காண்கின்றனர்.
இந்த தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட சாத்தூர் ராமச்சந்திரன், வைகைச்செல்வன் ஆகியோரே தற்போதும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் மீண்டும் களம் காண்கின்றனர். அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் ரமேஷ் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் உமாதேவி களம் இறங்கி உள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் வைகைச்செல்வன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 50,000
2. அசையும் சொத்து- ரூ. 47,28,359.49
3. அசையா சொத்து- ரூ. 84,50,000
தி.மு.க. வேட்பாளர் சாத்தூர் ராமச்சந்திரன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 16,24,000
2. அசையும் சொத்து- ரூ. 1,60,14,439
3. அசையா சொத்து- ரூ. 81,96,775
விருதுநகர் மாவட்டத்தில் முற்றிலும் கிராம பகுதிகளை கொண்ட தொகுதி என்றால் அது அருப்புக்கோட்டைதான்.
இந்த தொகுதிக்கு மற்றும் ஒரு சிறப்பு உண்டு. 1977-ம் ஆண்டு அ.தி.மு.க.வை நிறுவிய எம்.ஜி.ஆர். முதன் முதலாக களம் கண்டது இந்த தொகுதியில்தான். இங்கு வெற்றி பெற்றுத்தான் அவர் கோட்டைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
1952-ம் ஆண்டு முதல் அருப்புக்கோட்டை தொகுதி தேர்தலை சந்தித்து வருகிறது. இதில் 1977-ம் ஆண்டுவெற்றி பெற்று முதல்-அமைச்சரான எம்.ஜி.ஆர்., தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக வி.எஸ். பஞ்சவர்ணம் என்பவரை சிறப்பு பிரதிநிதியாக நியமித்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தார்.
1986-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வி.எஸ். பஞ்சவர்ணம் அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கினார். அவருக்கு ஆதரவு திரட்ட உடல்நலம் குன்றி இருந்த நிலையிலும் அருப்புக்கோட்டை தொகுதிக்கு வந்து எம்.ஜி.ஆர். பிரசாரம் மேற்கொண்டார்.
எம்.ஜி.ஆரின் மனம் கவர்ந்த அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்துதான் தி.மு.க.வைச் சேர்ந்த தங்கபாண்டியன் வெற்றி பெற்று அமைச்சரானார். அவர் வழியில் அவரது மகன் தங்கம் தென்னரசும் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது அருப்புக்கோட்டை தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,22,980. ஆண்கள் 1,08,063. பெண்கள் 1,14,899. மூன்றாம் பாலினத்தவர் 18.
திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி ஆகிய யூனியன் பகுதிகளில் உள்ள கிராமங்களை கொண்டு 1952 முதல் களம் கண்ட அருப்புக்கோட்டை, தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் 2011-ம் ஆண்டு முதல் அருப்புக்கோட்டை நகர் மற்றும் யூனியன், சாத்தூர் யூனியனில் உள்ள சில கிராம பகுதிகளை கொண்ட தொகுதியாக மாறி உள்ளது.
இந்த தொகுதியின் பிரதான தொழில் நெசவு மற்றும் விவசாயம்தான். முற்றிலும் கிராம பகுதிகளை கொண்ட அருப்புக்கோட்டை தொகுதியில் பொருளாதார மேம்பாடு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அருப்புக்கோட்டை நகர் பகுதியில் மக்களின் முக்கிய பிரச்சினையாக நீடித்து வருவது குடிநீர் பிரச்சினைதான்.
இதனை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் மக்களின் தாகம் தணியாத நிலையே உள்ளது. வைகையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டம் பெயரளவில் தான் இருக்கிறது. இந்த திட்டம் செயல் இழந்தே உள்ள நிலையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பெறப்படும் தண்ணீரும் குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க முடியவில்லை.
அருப்புக்கோட்டையில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை.
தேர்தல் வெற்றி
1952 ஜெயராமரெட்டியார் (காங்கிரஸ்)
1957 ராமசாமி (சுயேட்சை)
1962 கடம்பவன சுந்தரம் (காங்கிரஸ்)
1967 சவுடி சுந்தரபாரதி (சுதந்திரா கட்சி)
1971 சவுடி சுந்தரபாரதி (அ.இ.பா.பி.)
1977 எம்.ஜி.ஆர். (அ.தி.மு.க.)
1980 பிச்சை (அ.தி.மு.க.)
1984 பிச்சை (அ.தி.மு.க.)
1986 பஞ்சவர்ணம் (அ.தி.மு.க.) இடைத்தேர்தல்
1989 தங்கபாண்டியன் (தி.மு.க.)
1991- மணிமேகலை (அ.தி.மு.-க.)
1996 தங்கபாண்டியன் (தி.மு.க.)
1998 தங்கம்தென்னரசு (தி.மு.க.) இடைத்தேர்தல்
2001 சிவசாமி (அ.தி.மு.க.)
2006 தங்கம்தென்னரசு (தி.மு.க.)
2011 வைகைச்செல்வன் (அ.தி.முக.)
2016 சாத்தூர் ராமச்சந்திரன் (தி.முக.)
2016 தேர்தல்
சாத்தூர் ராமச்சந்திரன் (தி.மு.க. வெற்றி)- 81,485
வைகைச்செல்வன் (அ.தி.மு.க.)- 63,431
செந்தில்குமார் (இந்திய கம்யூ.)- 9817
வெற்றிவேல் (பா.ஜனதா)- 3223
நாகேந்திரன் (நாம் தமிழர்)- 1404