ஐ.பி.எல்.(IPL)
அதிமுக சார்பில் எம்எல்ஏ-வாக இருக்கும் ஓ.எஸ். மணியன் மீண்டும் களம் இறங்கியுள்ளார். திமுக சார்பில் எஸ்.கே. வேதரத்தினம் நிறுத்தப்பட்டுள்ளார்.
சொத்து மதிப்பு விவரம்
எஸ்.கே. வேதரத்தினம்
1. கையிருப்பு- ரூ. 6 லட்சம்
2. அசையும் சொத்து- ரூ. 30,61,451
3. அசையா சொத்து- ரூ. 28,00,000
ஓ.எஸ்.மணியன்
1. கையிருப்பு- ரூ. 4,84,983
2. அசையும் சொத்து- ரூ. 1,13,87,930.01
3. அசையா சொத்து- ரூ. 47,00,000
நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி கடந்த 1962-ம் ஆண்டு திருத்துறைப்பூண்டி தொகுதியில் இருந்து பிரிந்து வேதாரண்யம் தொகுதியாக உருவானது. இந்த தொகுதியில் பெரும்பாலும் விவசாயிகளும், மீனவர்களும், உப்பளத் தொழிலாளர்கள் நிறைந்த தொகுதியாகும்.
ஓ.எஸ். மணியன், வேதரத்தினம்
இத்தொகுதியில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 278 மக்கள் உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 342 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 94275. பெண் வாக்காளர்கள் 98067. மூன்றாம் பாலின வாக்காளர்கள் அறவே இந்த தொகுதியில் இல்லை.
2016 தேர்தல் வெற்றி விவரம்:
ஓ.எஸ். மணியன் (அ.தி.மு.க)- 60,836
பி.வி.ராஜேந்திரன் (காங்.)- 37,838
வேதரத்தினம் (பா.ஜ.க)- 37,086
வைரவநாதன் (தே.மு.தி.க)- 4,594
உஷா கண்ணன் (பா.ம.க)- 2,081
ராஜேந்திரன் (நாம் தமிழர்)- 1,386
இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:
1962 என்.எசு.இராமலிங்கம் (காங்கிரசு)
1967 பி.வி.தேவர் (காங்கிரசு)
1971 எம்.மீனாட்சி சுந்தரம் (தி.மு.க)
1977 எம்.மீனாட்சி சுந்தரம் (தி.மு.க)
1980 எம்.எசு. மாணிக்கம் (அ.தி.மு.க)
1984 எம்.மீனாட்சி சுந்தரம் (தி.மு.க)
1989 பி.வி.ராஜேந்திரன் (காங்கிரசு)
1991 பி.வி.ராஜேந்திரன் (காங்கிரசு)
1996 எஸ்.கே.வேதரத்தினம் (தி.மு.க)
2001 எஸ்.கே.வேதரத்தினம் (தி.மு.க)
2006 எஸ்.கே.வேதரத்தினம் (தி.மு.க)
2011 என்.வி.காமராஜ் (அ.தி.மு.க)
2016 ஓ.எஸ்.மணியன் (அ.தி.மு.க)
வேதாரண்யம் தொகுதி உருவானதிலிருந்து இந்த தொகுதி தி.மு.க.வின் கோட்டையாக விளங்கி வந்துள்ளது. இந்த தொகுதியில் 11 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 6 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது.
எதிர்பார்ப்புகள்
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் நீண்ட காலமாக மக்களின் எதிர்பார்ப்பாக விளங்கி வரும் உப்பள தொழிற்சாலை வேதாரண்யம் தாலுகாவில் 9 ஆயிரம் ஹெக்டேரில் சிறு, குறு உப்பு உற்பத்தியாளர்கள் 2 தனியார் தொழிற்சாலைகளும் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 30 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உப்பை மூலப்பொருளாகக் கொண்டு காஸ்டிக் சோடா தொழிற்சாலை தொடங்கப்படும் என அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். ஆனால் அதை ஏட்டு அளவிலேயே இன்றளவும் உள்ளது. இதற்கான எந்தவிதமான பணியும் தொடங்கப்படவில்லை.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய இதுவரை அகல ரயில்பாதை அமைத்து உப்பை ஏற்றுமதி செய்வதற்கு எந்த வழியும் தெரியவில்லை கடந்த 15 ஆண்டுகளாக அகல ரயில் பாதை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. அகல ரயில் பாதை அமைத்துக் கொடுத்தால் மட்டுமே ஏதுவாக உப்பை ஏற்றுமதி செய்ய முடியும் என்பது உப்பு உற்பத்தியாளர்களின் கருத்து.
இந்த தொகுதியில் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மா விவசாயம் நடைபெற்று கொண்டிருக்கிறது. சேலத்திற்கு அடுத்தபடியாக மா உற்பத்தியில் ஆண்டொன்றுக்கு 10 ஆயிரம் டன் இந்த பகுதியில் பல்வேறு வகையான மாம்பழங்கள் விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர். இந்த தொகுதியில் நீண்ட நாள் கோரிக்கையான மாங்கூழ் தயார் செய்யும் தொழிற்சாலை நிறுவப்படவில்லை.
இதேபோல் 5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப் பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த முல்லைப் பூ சாகுபடியை நம்பி சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்த முல்லைப் பூவை மூலப்பொருளாக கொண்டு சென்ட் தொழிற்சாலை துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தொழிற்சாலை இதுவரை வரவில்லை. விவசாயத்தை நம்பிய கடைமடைப் பாசனப் பகுதிதான். வேதாரண்யம் தொகுதியில் இதுவரை ஒரு தொழிற்சாலை கூட தொடங்கப்படவில்லை.
தற்சமயம் ஆயத்த ஆடை பூங்கா தொடங்கப்பட்டு முதல்கட்டமாக 500 பெண்கள் ஆடை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள் மேலும் உணவு பூங்காவும் அமைய உள்ளது இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த தொகுதியில் சுதந்திரம் அடைந்ததிலிருந்து இது வரை தீர்க்கப்படாத ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் இப்பகுதியில் தென்னடார், சிறுதலைக்காடு, கடினல்வயல், கோடியக்கரை, கோடியக்காடு, தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை.
திமுக ஆட்சிக்காலத்தில் கோ.சி.மணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம்தான் இன்னமும் இயங்கி வருகிறது. அந்த குடிநீர் போதுமானதாக இல்லை அதனை மேம்படுத்தி முறையாக குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
வேட்டைக்காரணிருப்பு பகுதியில் ஆசியாவிலேயே இரண்டாவது மிகபெரிய நெல் சேமிப்பு கிடங்காக ரூபாய் 164 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டு வரும் இந்த நெல் சேமிப்பு கிடங்கு கடந்த கஜா புயலில் முற்றிலும் சேதமடைந்து தற்போது மீண்டும் புதுப்பிக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் பெரும்பாலும் கடற்கரையை அதிக அளவில் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இது வரை எந்த ஒரு மீனவ கிராமத்திலும் ஒரு துறைமுகம் கூட கட்டிக் கொடுக்கப்பட வில்லை.
தற்போது வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் ரூ.110 கோடியிலும், ஆறுகாட்டுத்துறை ரூ.150 கோடியிலும் தூண்டில் வளைவு அமைக்க திட்டமிடப்பட்டு வெள்ளப்பள்ளத்தில் மட்டும் தற்போது பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. ஆண்டு முழுவதும் மீன் பிடிக்கும் கோடியக்கரை கடல் பகுதியில் 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஜட்டி ஒன்று கட்டப்பட்டது. மீனவர்களின் படகுகளை கடல் ஆலையில் இருந்து பாதுகாப்பாக ஓரமாக அதை நிறுத்திக் கொள்வதற்கான வசதி இருந்தது.
தற்போது அந்த ஜட்டி முற்றிலும் அழிந்துவிட்டது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் அக்டோபர் முதல் மார்ச் வரை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடித்து வருகின்றனர் 40 ஆண்டு காலமாக நடைபெறும் இந்த மீன்பிடி சீசன் காலத்தில் படகுகளை நிறுத்துவதற்கு ஒரு தூண்டில் வளைவு அல்லது ஒரு சிறிய துறைமுகம் கட்டவேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.