ஐ.பி.எல்.(IPL)
தங்கம்தென்னரசு 2 முறை வெற்றிபெற்று 3-வது முறையாக களம் இறங்கும் திருச்சுழி தொகுதி கண்ணோட்டம்
3-வது முறையாக தேர்தலை சந்திக்கும் திருச்சுழியில் திமுக வேட்பாளர் தங்கம்தென்னரசை அதிமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னணி கழகத்தைச் சேர்ந்த ராஜசேகர் எதிர்கொள்கிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி தொகுதி என்பது காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய யூனியன் பகுதிகளில் உள்ள கிராமங்களை கொண்டது.
இதற்கு முன்னர் இந்த 3 யூனியன்களையும் கொண்டு அருப்புக்கோட்டை தொகுதியாக இருந்தது. தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் 2011 முதல் திருச்சுழி தொகுதியாக மாறி உள்ளது. தற்போது உள்ள திருச்சுழி தொகுதிதான் அப்போதைய அருப்புக்கோட்டை தொகுதி.
அருப்புக்கோட்டை தொகுதியாக இருந்தபோது 1977-ம் ஆண்டு அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார். அவர் முதலமைச்சர் ஆனதால் தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக வி.எஸ். பஞ்ச வர்ணம் என்பவரை சிறப்பு பிரதிநிதியாக நியமித்தார்.
பின்னர் 1980 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பிச்சை இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். 1986-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் பஞ்ச வர்ணம் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றார்.
இந்த இடைத்தேர்தலுக்கு உடல்நலம் குன்றிய நிலையில் இருந்தாலும் எம்.ஜி.ஆர். நேரடியாக வந்து பிரசாரம் மேற்கொண்டார்.
2011-ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பு நடைபெற்றது. அப்போது அருப்புக்கோட்டையில் இருந்து புதிதாக உருவானது திருச்சுழி. அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் திருச்சுழி 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் தங்கம் தென்னரசு வெற்றிபெற்றார். இவரது தந்தை தங்கப்பாண்டியன் ஏற்கனவே அருப்புக்கோட்டை தொகுதியாக இருந்தபோது 1989 மற்றும் 1996-ம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று அமைச்சர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மரணம் அடைந்ததால் 1998-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது மகன் தங்கம்தென்னரசு வெற்றி பெற்றார். 2001-ம் ஆண்டு தோல்வி அடைந்த அவர் 2006-ம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.
திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளரம் தங்கம்தென்னரசு
தற்போது அவர் 6-வது முறையாக களம் காண்கிறார். இவர் எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் மூவேந்தர் முன்னணி கழகத்தைச் சேர்ந்த ராஜசேகரும், அ.ம.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சிவசாமியும் போட்டியிடுகின்றனர்.
இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 20 ஆயிரத்து 720. ஆண்கள் 1,08,172. பெண்கள் 1,12,536. மூன்றாம் பாலினத்தவர் 12.
திருச்சுழி தொகுதி என்பது முற்றிலும் கிராம பகுதிகளை கொண்ட பகுதியாகும். விருதுநகர் மாவட்டத்திலேயே காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. இந்த தொகுதி மக்கள் முற்றிலும் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். நரிக்குடி பகுதியில் சீமைகருவேலமரங்களை வெட்டி கரிமூட்டம் போட்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த பகுதியில் பெரிய அளவில் தொழிற்சாலைகளும் இல்லை. கம்பிக்குடி நிலையூர் கால்வாய் திட்டம் மதுரை மாவட்டம் வரை வெட்டப்பட்டு முழுமை அடையாமல் உள்ளது. இந்த திட்டம் முழுமை அடையாததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலையூர் கம்பிக்குடி கால்வாய் திட்டம் முழுமை அடைந்தால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
நீண்டகால எதிர்பார்ப்பு
திருச்சுழி தொகுதியில் அரசு கலைக்கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கிருதுமால் நதியில் தொடர்ந்து வருடந்தோறும் வைகை ஆற்றில் இருந்து நிரந்தரமாக தண்ணீர் திறக்க அரசு உத்தரவு பிறப்பிக்க நடவடிக்கை வேண்டும். மேலும் தொகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் தண்ணீரை முழுமையாக முறைப்படுத்த வேண்டும், மழை காலங்களில் குண்டாற்றில் வரும் தண்ணீரை இந்த பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு கொண்டு செல்ல ஆங்காங்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் திருச்சுழி தொகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக உள்ளது. மேலும் இந்த பகுதி இளைஞர்களின் வாழ்வுக்கு வழிகாட்டும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பு.